கனிவாக நடந்து கொள்ளுங்கள்ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் ஆ.செல்லபாண்டியன் அறிவுரை.

பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் என ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் ஆ.செல்லபாண்டியன் அறிவுரை கூறினார். சென்னையை அடுத்த தாம்பரம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும்படி ஆட்டோ டிரைவர்களுக்கு 1.8.2024அன்று செல்லபாண்டியன் அறிவுரை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது: ஆட்டோ ஓட்டுநர்கள் இரவு நேரத்தில் பயணம் செய்வோருக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். சென்னை, தாம்பரம் பகுதிகளில் ஐ.டி. பணிகள், இரவுநேர பணிகளை முடித்து வரும் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அனைத்து இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு அளிக்க முடியாது என்பதால் நீங்கள் ஆதரவு தர வேண்டும். பெண்கள் துணிவுடன் ஆட்டோவில் ஏறி அமரும்போது கனிவுடன் பேச வேண்டும். காதுகளில் கடுக்கண், மணி போன்றவை அணிய கூடாது. பயணிகளுக்கு ஆட்டோ டிரைவர்கள் மீது நம்பிக்கை வரும் அளவுக்கு நடக்க வேண்டும். நல்ல ஆடைகளை அணிந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும். தாடி, மீசை பயங்கரமாக வைக்க வேண்டாம். இன்சூரன்ஸ், லைசென்ஸ், எப்.சி. போன்ற ஆவணங்கள் சரியான முறையில் வைத்து ஆட்டோ ஓட்ட வேண்டும். அப்போதுதான் விபத்து ஏற்பட்டாலும் இன்சூரன்ஸ் கிடைக்கும். தினமும் ஆயிரம் ரூபாய் அளவுக்கு சம்பாதிக்கும் நிலையில் டிரைவர்கள் குடிப்பழக்கத்தைவிட வேண்டும். குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் பத்து ஆயிரம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும். தவறு செய்தால் குடும்பம் பாதிப்புக்கு ஆளாகும் என்று உணர வேண்டும். ஆட்டோவில் அமர்ந்து புகையிலை போடுவது, செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். முன் சீட்டில் ஆட்களை அமர வைப்பது, கூடுதல் ஆள்களை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். டிரைவர்களை சங்க நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் உதவும் வகையில், விதிமுறைகளை பின்பற்றி ஆட்டோக்கள் இயக்க வேண்டும். இவ்வாறு செல்லபாண்டியன் பேசினார். காவல் உதவி ஆய்வாளர்கள் கலைச்செல்வன் , சுரேஷ் , சிறப்பு உதவி ஆய்வாளர் இளவரசன், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மமக தலைவர் எஸ்.கே.ஜாஹீர் ஹீசைன் மற்றும் பலர் உடனிருந்தனர்.