தேனி அருகே கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.

கொத்தமல்லி பொடி என பிரிண்டு செய்யப்பட்ட மூடைகளில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு பல ஆண்டுகளாக கடத்தி வந்தது அம்பலம். தேனி மாவட்டம் தமிழக கேரளா எல்லை பகுதி மாவட்டமாக உள்ளதாலும்,தமிழகத்தில் ரேஷனில் இலவசமாக வழங்கப்படும் அரிசிக்கு கேரளாவில் நல்ல விலை கிடைப்பதாலும் தேனி மாவட்டத்திலிருந்து நாள்தோறும் டன் கணக்கில் ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று கோடாங்கிபட்டி அருகே உள்ள திருச்செந்தூர் காலனி என்னும் பகுதியில் வீரலட்சுமி நகருக்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் உள்ள குடோனில் ரேஷன் டன் கணக்கில் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக பழனிச்செட்டிபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு இருந்து குடோனை ஆய்வு செய்தபோது அங்கு,தார்ப் பாயால் மூடப்பட்டு, தலா 50 கிலோ எடை கொண்ட சுமார் 200 மூடைகளில் ரேஷன் அரிசி கடத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.மேலும் அந்த அரிசி மூட்டைகளின் மேல் பகுதியில் "கொத்தமல்லி பொடி" என ஆங்கிலத்தில் பிரிண்டு செய்யப்பட்டிருந்ததுடன்,கொத்தமல்லி பொடி என பிரிண்டு செய்யப்பட்ட ஸ்டிக்கர்களும் முகவரியுடன் ஒட்டப்பட்டிருந்தன. இதுகுறித்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில்,அவர்கள் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி தனியார் வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டு தேனியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டு அங்கு ரசீது பெறப்பட்டது. இதன் அடிப்படையில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த கோடாங்கிபட்டியைச் சேர்ந்த பால்பாண்டி என்பவரை கைது செய்த உணவுப் பொருள் கடத்தல் பிரிவு போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட பால்பாண்டி கடந்த பல ஆண்டுகளாக ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கொத்தமல்லி பொடி என்கிற பெயரில் 50 கிலோ மூடைகளில் பேக்கிங் செய்து கேரளாவிற்கு தொடர்ந்து கடத்தி அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.இதற்கு போலீசார் மட்டும் உணவுப்பொருள் கடத்தல் பிரிவு போலீசாரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதில் பால்பாண்டிக்கு ஏற்பட்ட தொழில் போட்டி காரணமாக அவரது தொழில் எதிரிகள் தற்போது பால்பாண்டியை காட்டிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. பால்பாண்டிக்கு மொத்தமாக ரேஷன் அரிசி வழங்கிய விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரிகள் யார் என தீவிரமாக விசாரணை நடத்தி அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.